Published Date: February 15, 2024
CATEGORY: LEGISLATIVE ASSEMBLY

சென்னை: பெங்களூரு , ஹைதராபாத் நகரங்களில் இருந்து வெளியேறும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் கோவை, மதுரையை நோக்கி வர உள்ளதாக சட்டசபையில் கூறிய அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், வரும் 23, 24 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஐ.டி மாநாடு நடைபெற உள்ளதாக கூறினார்.
கல்லூரிகளில் படிக்கும் ஒவ்வொருவரின் கனவு என்னவென்றால், கேம்பஸ் இண்டர்வியூவில் வேலைக்கு சேர வேண்டும். லட்சங்களில் சம்பளம் வாங்க வேண்டும்.. என்பது தான்.. அதுவும் தங்கள் ஊரிலேயே அந்த வேலைகள் கிடைக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் அது மட்டும் இதுவரை நடக்காமல் இருக்கிறது. காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டில் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்றாலும் ஐடி வேலையில் சேர வேண்டும் என்றால் சென்னைக்கு அல்லது பெங்களூருக்கு அல்லது ஹைதராபாத்திற்கு தான் செல்ல வேண்டும் என்கிற நிலை இருக்கிறது.
சென்னையில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் செயல்படும் நிலையில், கோவை, மதுரையில் ஐடி நிறுவனங்கள் சிறிய அளவிலேயே இருக்கின்றன. சென்னையில் மிகப் பெரிய அளவில் வேலை வாய்ப்பு தரும் ஐடி நிறுவனங்கள் , மதுரை, கோவையில் தரவில்லை.. காரணம் அந்த அளவிற்கு ஐடி நிறுவனங்கள் மதுரை, கோவை பகுதியில் அமையவில்லை.. இந்நிலையில் மதுரை கோவைக்கு அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நல்ல செய்தி கூறியிருக்கிறார். என்னவென்றால், பெங்களூர் , ஹைதராபாத் நகரங்களில் இருந்து வெளியேறும் ஐ.டி நிறுவனங்கள் கோவை, மதுரையை நோக்கி வர உள்ளதாக கூறினார்..
சட்டப்பேரவை கேள்வி-பதில் நேரத்தில் காரமடை நகராட்சி பகுதியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தமிழக அரசு முன்வருமா என்று செல்வராஜ் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "கோவை விளாங்குறிச்சியில் 61.59 ஏக்கரில் 107 கோடி ரூபாய் முதலீட்டில் எல்காட் நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கி இருக்கிறது.
3,524 சதுர அடியில் அங்கு நிர்வாக கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. அந்த கட்டிடங்கள் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இடம் தரும் வகையில் 2.66 லட்சம் சதுர அடியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், காரமடையில் புதிய தகவல் தொழில்நுட்ப அமைக்க வேண்டிய தேவையில்லை.
கோவையில் எல்காட் நிறுவனம் கடந்த அதிமுக ஆட்சியில் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டியதாகவும், இதனால், அவற்றை திறக்க முடியாத நிலை இருக்கிறது. சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டு 2.5 லட்சம் சதுர அடியில் கோவையில் கட்டப்பட்ட கட்டடம் திறக்கப்பட்டால் பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வெள்ளம் , பேரிடர் பாதிப்பு ஏற்படும் பகுதியில் இல்லாமல் மற்ற பகுதியில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4-5 மில்லியன் சதுர அடியில் ஐடி நிறுவனங்கள் புதிதாக கட்டடம் கட்டப்படுவது வழக்கம்,. ஆனால் கடந்த ஒரே ஆண்டில் சென்னையில் 11 மில்லியன் சதுர அடியில் ஐடி நிறுவனங்கள் கட்டப்பட்டிருக்கிறது.
பெங்களூரு , ஹைதராபாத் நகரங்களில் இருந்து வெளியேறும் ஐ.டி நிறுவனங்கள் கோவை, மதுரையை நோக்கி வர உள்ளன. வரும் 23, 24 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஐ.டி மாநாடு நடைபெற இருக்கிறது" இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்து பேசினார். கோவை மதுரைக்கு ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் வந்தால் அங்கு வேலைவாய்ப்பு மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்பதால் கோவை, மதுரைக்கு இது மிகவும் நல்ல செய்தியாகும்.
Media: tamil.oneindia.com